Our Lady Of Medjugorje
Messages From 2009 In Tamil
அன்புள்ள குழந்தைகளே! இன்றும் கூட நான் உங்களை செபம் செய்ய அழைக்கின்றேன். நீங்கள் செய்யும் செபங்கள் எனது இதயத்தில் விதைகளாக வந்து விழுகின்றன. அதை உங்களது ஆன்மாக்களின் மீட்பிற்காக என் மகன் இயேசுவிடம் கொடுக்கின்றேன். அன்பு பிள்ளைகளே! விண்ணக வாழ்வே உங்களது எதிர்காலம். எனவே விண்ணக வாழ்வை அன்பு செய்யுங்கள். இந்த உலகில் நீங்கள் பெற்றுள்ள செல்வங்கள் யாவும் உங்களைப் படைத்த கடவுளிடம் நெருக்கமாக வருவதற்கு உதவுகின்றன. நீங்கள் தவறான பாதையில் சென்று கொண்டிருப்பதால்தான் இவ்வளவு நீண்ட காலம் நான் உங்களோடு இருக்கின்றேன். ஏனென்றால் என்னுடைய உதவியால் மட்டுமே நீங்கள் உங்கள் இதயங்களை கடவுளுக்குத் திறந்து கொடுக்க முடியும்.. உங்களில் சிலர் என்னுடைய வார்த்தைகளை ஏற்று அதன்படி வாழ்ந்துவருவதால், விண்ணக வாழ்வை நோக்கிய தூய வழியில் நடந்து கொண்டிருக்கிறார்கள். எனது வார்த்தைகளுக்கு செவிமடுத்தமைக்கு நன்றி.
25 ஜனவரி 2009
அன்புள்ள குழந்தைகளே! ஒறுத்தல் முயற்சிகளும், செபமும், தவமும் நிறைந்த இந்த தவக்காலத்தில் நீங்கள் ஒப்புறவு அருட்சாதனம் செய்து உங்களைப் புதுப்பித்துக்கொள்ளுமாறு நான் அழைக்கின்றேன். இதனால் நீங்கள் பெறும் அருட்கொடைகள் உங்களுக்கு நல்ல மாற்றத்தைக் கொடுக்கிறது. சிறிய பிள்ளைகளே! மனம்மாறி கடவுளுக்கும் அவரது சித்தங்களுக்கும் உங்கள் இதயங்களை திறந்து கொடுங்கள். என் வார்த்தைகளுக்கு செவிமடுத்தமைக்கு நன்றி.
25 பிப்ரவரி 2009
அன்னை மிர்ஜானாவிற்கு (வருடத்திற்கு ஒருமுறை) 2009 மார்ச் 18-ஆம் தேதி கொடுத்த சிறப்புச் செய்தி.
அன்புள்ள குழந்தைகளே! உங்கள் இதயங்களை நீண்ட நேரம் நேர்மையாக உற்று நோக்கும்படி நான் உங்களை அழைக்கின்றேன். அங்கு என்ன காண்கிறீர்கள்? உங்கள் இதயங்களின் எனது மகன் எங்கே? அவரைப் பின்பற்றி நடக்கவேண்டும் என்ற ஆசை எங்கே? எனது பிள்ளைகளே! "என் கடவுள் எனக்காக வைத்துள்ள திட்டம் என்ன? அதற்காக நான் என்ன செய்ய வேண்டும்?" என்ற கேள்விகளை இந்தத் தவக்காலத்தில் கேளுங்கள். செபமும் தபமும் செய்து இரக்கமுள்ள இதயமுள்ளவர்களாக வாழுங்கள். உங்களை வழிநடத்தும் ஆயர்களை மறந்து விடாதீர்கள். அவர்கள் எனது மகனைவிட்டுப் பிரிந்துவிடாமல் நல்ல ஆயர்களாக தனது மந்தையை வழிநடத்தவேண்டுமென்று அவர்களுக்காக செபியுங்கள்.
அங்கு கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான மக்களையும் ஒரு முறை ஏறெடுத்துப் பார்த்துவிட்டு மீண்டுமொறுமுறை அன்னை கூறியதாவது: "நான் உங்களை எவ்வளவு அன்பு செய்கின்றேன் என்பதை நினைத்துப் பார்ப்பீரகளானால் நீங்கள் மகிழ்ச்சியால் நிறைந்து அழுவீரகள்", நன்றி.
19 மார்ச் 2009
25 march 2009 அன்புள்ள குழந்தைகளே! இந்த இளவேனிற்காலம் ஆரம்பித்துள்ளது. பனிக்காலத்திலிருந்து இயற்கை எழுச்சி பெறுவதைப்போல நீங்களும் உங்கள் உள்ளங்களை செபங்களோடு எழுச்சியுறச்செய்து உயிர்த்த இயேசுவின் ஒளியைப் பெற்றுக்கொள்ள தயாராகுங்கள். சிறிய பிள்ளைகளே, கடவுள் தம் இதயத்திற்கு நெருக்கமாக உங்களை அரவனைத்து, நிறைவாழ்வைப் பெற்றுக் கொள்ள உங்களது உள்ளங்களை திறக்கச் செய்வாராக. உங்களது உண்மையான மனமாற்றத்திற்காக எல்லாம் வல்ல இறைவனிடம் உங்களுக்காக நான் மன்றாடுகிறேன். என் வார்த்தைகளுக்கு செவிமடுத்தமைக்கு நன்றி. 25 மார்ச் 2009
25 april 2009 அன்புள்ள குழந்தைகளே! சமாதானத்திற்காக மன்றாடுங்கள். உங்கள் குடும்பங்கள் சமாதானத்தின் சாட்சிய வாழ்வை வெளிப்படுத்தட்டும். இதனால் அமைதியில்லாத இவ்வுலகில் சமாதானம் சிறந்ததொரு பொக்கிஷமாக திகழும். நாமே உங்களது அன்னையும் சமாதானத்தின் அரசியுமாவேன். கடவுள் தரும் சமாதானத்திற்கு உங்களை அழைத்துச்செல்ல நான் ஆசிக்கிறேன். எனவே செபியுங்கள். செபியுங்கள். செபியுங்கள். என் வார்த்தைகளுக்கு செவிமடுத்தமைக்கு நன்றி. 25 ஏப்ரல் 2009
25 may 2009 அன்புள்ள குழந்தைகளே! திருமுழுக்குப்பெற்ற ஒவ்வொருவர் மீதும் தூய ஆவியானவர் இறங்கிவந்து, புத்துயிர் அளித்து, உண்மையின் சாட்சிய வாழ்விற்கு அழைத்துச்செல்ல வேண்டுமென்று செபியுங்கள். இதனால் கடவுளிடமிருந்து விலகியிருக்கும் நீங்கள், கடவுளின் அன்பை உணர்ந்து கொள்வீர்கள். நான் உங்களோடு இருக்கிறேன். உங்களுக்காக, அனைத்திற்கும் மேலான கடவுளிடம் பரிந்துரைக்கிறேன். என் வார்த்தைகளுக்கு செவிமடுத்தமைக்கு நன்றி. 25 மே 2009
25 june 2009 அன்புள்ள குழந்தைகளே! நான் உங்களோடு இருக்கும் இந்த அரிய கொடைக்காக கடவுளுக்கு நன்றி கூறுங்கள். என்னோடு இணைந்து அகமகிழுங்கள். சிறிய பிள்ளைகளே! கடவுள் மட்டுமே உங்கள் வாழ்வின் மையமாக இருந்து உங்களை சாட்சிய வாழ்விற்கு வழி நடத்த வேண்டுமென்று செபியுங்கள். இதனால் மற்ற அனைவரும் கடவுளின் அன்பை சுவைக்க முடியும். எனது கரங்களாக இருந்து, ஒவ்வொரு மனிதரும் கடவுளை நெருங்கி வருவதற்கு உதவுங்கள். தாயன்போடு நான் உங்களை ஆசீர்வதிக்கிறேன். என் வார்த்தைகளுக்கு செவிமடுத்தமைக்கு நன்றி. 25 ஜூன் 2009
25 july 2009 அன்புள்ள குழந்தைகளே! இந்த காலம், உங்களுக்கு செபத்தின் காலமாக அமைவதாக. என் வார்த்தைகளுக்கு செவிமடுத்தமைக்கு நன்றி. 25 ஜூலை 2009
25 august 2009 அன்புள்ள குழந்தைகளே! மனம் மாறுங்கள். புத்துயிர் பெற்றவர்களாக வாழுங்கள். சிறிய பிள்ளைகளே! பிறருக்கு தூய்மையை வெளிப்படுத்தும் அளவிற்கு உங்கள் உள்ளம் தூய்மையாக இல்லை. எனவே உங்களது மனமாற்றத்திற்காக முதலில் செபியுங்கள். அதனால் நீங்கள் கடவுளின் அன்பிற்கு சாட்சிகளாக விளங்குவீர்கள். நான் உங்களை நிறை வாழ்வை நோக்கி அழைத்துச்செல்கிறேன். இதற்காகவே ஒவ்வொரு உள்ளமும் ஏங்கவேண்டும் என்று ஆசிக்கிறேன். என் வார்த்தைகளுக்கு செவிமடுத்தமைக்கு நன்றி. 25 ஆகஸ்டு 2009
25 sept 2009 அன்புள்ள குழந்தைகளே! மகிழ்ச்சியோடு, மனம் தளராமல் உங்களது மன மாற்றத்திற்காக செபியுங்கள். உங்களது மகிழ்ச்சியையும், துயரங்களையும் எனது மாசற்ற இதயத்திற்கு அர்ப்பணியுங்கள். இதனால் நான் உங்களை எனது மகன் இயேசுவிடம் அழைத்துச் செல்வேன். நீங்களும் அவரது இதயத்தின் அன்பை சுவைக்க முடியும். நான் உங்களோடு இருப்பது மட்டுமின்றி, உங்களை பயிற்றுவித்து , நிறைவாழ்விற்கு வழி காட்டுகிறேன். என் வார்த்தைகளுக்கு செவிமடுத்தமைக்கு நன்றி. 25 செப்டம்பர் 2009
25 oct 2009 அன்புள்ள குழந்தைகளே! எனது கொடைகளை உங்களுக்குக் கொடுப்பதுடன், என் மூலமாக கடவுள் துவங்கிய மீட்பைப் பின்பற்றி, நீங்கள் வளரச்சி பெறவேண்டுமென்று நான் அழைக்கின்றேன். தவமிருந்து செபியுங்கள். மகிழ்ச்சியோடு கடவுளின் சாட்சிகளாக வாழுங்கள். சிறிய பிள்ளைகளே! செபம் உங்களது உள்ளங்களை முழுமையாக நிரப்பட்டும். என் வார்த்தைகளுக்கு செவிமடுத்தமைக்கு நன்றி. 25 அக்டோபர் 2009
02 nov 2009 அன்புள்ள குழந்தைகளே! கடவுளின் அன்பு, நீங்கள் அவரை அப்பா, தந்தாய் என்று அழைக்க அனுமதித்தது. கடவுளின் அன்பு, பாவியாகிய உங்களையும் அவர்தம் பிள்ளைகளாக ஏற்றுக்கொள்கிறது. அத்தகைய பேரன்பை, நீங்கள் கண்டுணற வேண்டும் என நான் அழைக்கின்றேன். உங்களது இதயங்கள் உண்மையாகவே கடவுளின் அன்பை தேடுகிறதா என்று ஆராய்ந்து பாருங்கள். அவர் கடைசியாக அன்பு செய்யப்பட வேண்டியவரா? உலக இன்பங்களும், ஆசைகளும் உங்களைச் சூழ்ந்து கொண்டதால், எத்தனை முறை நீங்கள் அவரை மறுதளித்தீர்கள்? எத்தனை முறை அவருக்கு எதிராக செயல் புரிந்தீர்கள்? எத்தனை முறை அவரை மறந்து போனீர்கள்? சிந்தித்துப் பாருங்கள். சிறிய பிள்ளைகளே, நிரந்தரமற்ற உலக பொருட்களின் மாயையில் மூழ்கி, உங்களையே ஏமாற்றிக் கொள்ளாதீர்கள். உங்கள் உடலை விட ஆன்மா மிகவும் முக்கியமானது. அந்த ஆன்மாவை தூய்மை ஆக்குங்கள். உங்களுக்காக காத்து நிற்கும் கடவுளை கூப்பிடுங்கள். அவரையே அனைத்திற்கும் மேலாக அன்பு செய்யுங்கள். அவரிடம் திரும்பி வாருங்கள். நான் உங்களோடு இருப்பதற்கு காரணம் அவரே, அவரது கருணையே, அவரே என்னை அனுப்பியவர் என்பதை மறவாதீர்கள். என் வார்த்தைகளுக்கு செவிமடுத்தமைக்கு நன்றி. 2 நவம்பர் 2009
25 nov 2009 அன்புள்ள குழந்தைகளே! உங்கள் குடும்ப செபங்கள் புத்துயிர் பெற வேண்டுமென்று நான் உங்களை அழைக்கின்றேன். கடவுளின் வருகைக்கு மகிழ்வோடு உங்களை ஆயத்தப்படுத்துங்கள். சிறிய பிள்ளைகளே! உங்களது இதயம் தூய்மையும், சாந்தமும் நிறைந்திருந்தால், அதன் வழியாக அனைவரும் கடவுளின் அன்பை உணர்ந்து கொள்வார்கள். அன்பு பிள்ளைகளே! கடவுளின் அன்பினின்று தொலைந்து போனவர்களை மீட்கவும், கடவுள் மீது விசுவாசமும் நம்பிக்கையும் இல்லாதோர்க்கு நம்பிக்கையளிக்கவும், நான் ஆசிக்கின்றேன். இதற்காக, எனக்கு உதவும் கரங்களாக நீங்கள் செயல்பட அழைக்கின்றேன். என் வார்த்தைகளுக்கு செவிமடுத்தமைக்கு நன்றி. 25 நவம்பர் 2009
25 dec 2009 அன்புள்ள குழந்தைகளே! இந்த மகிழ்ச்சிமிகு நன்நாளில் அமைதியின் அரசர் இயேசுவை உங்கள் முன் கொண்டு வருகிறேன். அவரே தம் சமாதானத்தையும், ஆசீரையும் உங்கள் மேல் பொழிவாராக! சிறிய பிள்ளைகளே, அவர் அளித்த சமாதானத்தையும், கொடைகளையும் அன்போடு பிறரிடம் பகிர்ந்து கொள்ளுங்கள். என் வார்த்தைகளுக்கு செவிமடுத்தமைக்கு நன்றி. 25 டிசம்பர் 2009